கிரீஸ் கடற்பகுதியில் மூழ்கிய புலம்பெயர்ந்தோர் படகில் இருந்து மேலும் 500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
78 பேர் உயிரிழந்த படகு விபத்தில், மாயமானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த இழப்புக்கு காரணமானவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்துள்ளது.
750 பேரை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு தெற்கு கிரீஸில் உள்ள பைலோஸ் என்ற இடத்தில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் விபத்தில் சிக்கியது. இதில் 78 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் முறையான விசாரணை முன்னெடுக்கப்படும் என கிரீஸின் தற்காலிகப் பிரதமர் ஐயோனிஸ் சர்மாஸ் உறுதியளித்துள்ளார்.
கடலோரக் காவல்படையினரால் இணைக்கப்பட்டிருந்த கயிறு காரணமாக புலம்பெயர் மக்கள் பயணித்த படகு கவிழ்ந்ததாகக் கூறப்படும் தொடர் குற்றச்சாட்டுகளை கிரேக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
மேலும், விபத்தில் உயிர் பிழைத்த 104 பேரில் இருவர், கூட்ட நெரிசல் மிகுந்த படகு எப்படி நிலைகுலைந்தது என்பதை விவரித்துள்ளனர்.
ஆனால், கடலோர காவல்படையினரின் படகில் இருந்து புலம்பெயர் மக்களின் படகு கயிறால் இணைக்கப்பட்டிருந்ததாகவும், விபத்திற்கு அதுவும் ஒரு காரணம் என அந்நாட்டு நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது புலம்பெயர் மக்களின் படகு கவிழ்வதற்கும் மூன்று மணி நேரம் முன்னர் கயிறால் கடலோர காவல்படையினர் இணைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்க தரப்பு, புலம்பெயர் மக்களுக்கு உதவும் பொருட்டே கடலோர காவல்படையினர் கயிறால் அந்த படகை இணைத்ததாக குறிப்பிட்டுள்ளனர். விபத்துக்கு அது காரணமல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.