காலி மாவட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தை அமுல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக இலங்கையுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கல்விச் செயலர் எம்.என். ரணசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கடந்த திங்கட்கிழமை,காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் தனிப்பயனாக்கப்பட்ட பாடத்திட்ட மென்பொருளுடன் கூடிய நவீன கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் போர்டுகளை நிறுவுதல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில், கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன, பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையின் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய அரசின் மானிய உதவியின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், வசதி குறைந்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையின் கல்வித் துறையில் இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல மானியத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
இலங்கைக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த அபிவிருத்தி உதவி தற்போது சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதுடன் கிட்டத்தட்ட 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் 65 க்கும் மேற்பட்ட மானியத் திட்டங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.