யாழ்.மாவட்டத்தில் மக்கள் பாவனைக்கு ஏற்ற வகையில் இல்லாத பிரதான வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி மக்கள் பாவனைக்கு ஏற்றவகையில் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வீதி புனரமைப்பு செய்வதற்காக 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு, அப்போதைய மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக இருந்த அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி புனரமைப்புப் பணியை ஆரம்பித்திருந்தார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
எனினும் குறித்த வீதிகளூடாக நாள்தோறும் பயணிக்கும் மக்கள் வீதி புனரமைப்பு தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தல் விடுத்து வந்த நிலையில், தற்போது இந்த வீதிகள் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதியும் 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலும், புத்தூர் – சுன்னாகம் வீதி 03 மில்லியன் ரூபா நிதியிலும், மாவடி 3ம் வீதி 03 மில்லியன் ரூபா நிதியிலும் மக்கள் பாவைனைக்கு ஏற்ற வகையில் புனரமைப்பு செய்யப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.