உலகளாவிய ரீதியில், முன்னரை விட அதிகமான மக்கள் ஊசி மூலம் போதை பொருட்களை அதிகளவில் உட்செலுத்துவதாக, உலகளாவிய போதைப்பொருள் பயன்பாடு பற்றிய ஐக்கிய நாடுகளின் அறிக்கை கூறுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் 13.2 மில்லியன் மக்கள் ஊசி மூலம் போதை மருந்துகளை உட்செலுத்தியுள்ளதாகவும், இது முன்னர் மதிப்பிடப்பட்டதை விட 18 சதவீதம் அதிகம் எனவும், வியன்னாவை தளமாகக் கொண்ட போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஜக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஃபெண்டானில் மற்றும் மெத்தாம்பேட்டமைன் போன்ற செயற்கை பொருள்கள் இப்போது சட்டவிரோத மருந்து சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உலகளவில், போதைப்பொருள் பாவனையாளர்கள் 23 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும்,போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் ஒரு தசாப்தத்தில் 45 சதவீதத்தால் அதிகரித்து ஏறக்குறைய 40 மில்லியனாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், மனநல குறைபாடுகள் உள்ளவர்கள், சமூக-பொருளாதார பின்னணியில் பின்தங்கியவர்கள் மற்றும் இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக காணப்படுகின்றனர் என அறிக்கை கூறுகிறது.
மேலும், கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவைக் காட்டிலும், கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் மருந்துகளை உட்செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
18 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில், பெண்களை விட ஆண்கள் ஐந்து மடங்கு அதிகமாக போதை மருந்துகளை செலுத்தி, தங்கள் பெண் நண்பர்களுக்கு இந்த பழக்கத்தை அறிமுகப்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், ஐந்தில் ஒருவர் மட்டுமே சிகிச்சையை அணுக முடியும் எனவும், குறிப்பாக பெண்கள் தடைகளை எதிர்கொள்வதாகவும் ஜக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
போதை ஊசி மருந்துப் பாவனைகள், கொவிட்- 19 உடன் தொடர்புபட்டவையாகவும், சட்டத் தடைகள், சமூக இழிவு, குழந்தை பராமரிப்பு இல்லாமை மற்றும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்ற பயம் போன்றவற்றாலும் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வியன்னாவை தளமாகக் கொண்ட போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஜக்கிய நாடுகள் அலுவலகத்தின் தலைவரான காடா வாலி இது தொடர்பில் கூறுகையில், பல சந்தர்ப்பங்களில், சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது அது தோல்வியில் முடிவடைகின்றது என்றார்.
மேலும் அவர், போதைப்பொருள் உற்பத்திகளைக் கட்டுப்படுத்தி, போதைப் பொருள்களைக் கடத்தும் கும்பல்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், செயற்கை மருந்துகளின் உற்பத்தியானது, சட்டவிரோத சந்தைகளை தூண்டி மக்கள் மற்றும் சமூகங்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கின்றது எனவும் தெரிவித்தார்.