பாலியல் உறவு பற்றி 16 வயதுச் சிறுமி  முடிவு செய்யலாம் – மேகாலயா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பரபரப்பு

மேகாலயாவில் 16 வயதுச் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து விட்டதாக சிறுவன் ஒருவன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் குற்ற அறிக்கையை நீக்கக் கோரி, மேகாலயா உயர் நீதிமன்றில் சிறுவன் தரப்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், மனுதாரரான சிறுவன் பல்வேறு வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, அந்தச் சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிறுவனின் மாமா வீட்டில் வைத்து இருவரிடையேயும் பாலியல் ரீதியிலான உறவு நடந்துள்ளமை தெரியவந்துள்ளது. ஆனால், பாலியல் தாக்குதல் என்ற அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அது கருத்தொருமித்த செயலாகவே நடைபெற்றுள்ளது.

சிறுமி தனது வாக்குமூலத்தில், தான் அந்தச் சிறுவனின் காதலி என்றும், கட்டாயம் எதுவுமின்றி உறவுக்கு ஒப்புதல் அளித்தது பற்றியும் கூறியுள்ளார். மனுதாரரான சிறுவனும் பாதிக்கப்பட்ட சிறுமியும் காதல் உறவிலேயே இருந்துள்ளனர், எனவும் சிறுவன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி விசாரணை செய்த மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. தீங்தோ வெளியிட்ட தீர்ப்பில், 16 வயதில் உடல் மற்றும் மனரீதியாக ஒருவர் நன்றாக வளர்ச்சி அடைந்திருப்பார். அவர்களது சுகாதார நலன் பற்றியும், பாலியல் உறவில் ஈடுபடுவது உள்பட அவர்களுக்கு சுயநினைவுடனான முடிவை எடுப்பதற்கான தகுதியையும் அவர்கள் பெற்றிருப்பார்கள் என கருதுவது நியாயமாகும். இதனால், சிறுமியின் வாக்குமூலம் மற்றும் மனுதாரரின் ஆவணங்கள் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, சிறுமியின் வாக்குமூலம் மனுதாரருக்கு ஆதரவாக அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

இதனால், இதில் குற்ற உள்நோக்கம் எதுவும் இல்லை என நீதிமன்றம் முடிவு செய்தது. முடிவில், மனுதாரருக்கு எதிரான முதல் குற்ற அறிக்கைப் பதிவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply