இடைநிறுத்தி வைக்கப்பட்ட கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.
வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகள் காரணமாக கடந்த ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் மஹவ முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து பாதை புனரமைக்கப்படவிருந்த நிலையில், அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து பாதை முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளது.
எனினும், அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து பாதை புனரமைப்பு பணிகள் மழைக்காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.