செந்தில் பாலாஜியை பதவி நீக்கிய ஆளுநர் – எதிர்ப்பையடுத்து உத்தரவை நிறுத்தி வைத்தார்

தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த பாலாஜி, அதற்கு முன்னர் அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வந்தது.

இதனிடையே, கடந்த 13 ஆம் திகதி அவரது வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இருதய ரத்தக்குழாயில் 3 இடங்களில் அடைப்பு கண்டறியப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அவரை அமலாக்கத்துறையினரால் விசாரிக்க முடியவில்லை. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு இருப்பதால், அவரிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரித்தளித்தார்.

இந்த இலாகா மாறுதல் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், இலாகா மாறுதல் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் செந்தில்பாலாஜி சில குற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதாலும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பதாலும், அவர் தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பதை ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

 

அதற்கு பதிலடியாக தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், செந்தில்பாலாஜி பொறுப்பில் இருந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படுகிறது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார். அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது, என்று கூறப்பட்டு இருந்தது.

அதேவேளை, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 12 ஆம் திகதி வரை நீடித்து நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் நேற்று இரவு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார்.

மாநில அரசு மற்றும் முதலமைச்சரின் பரிந்துரையின்றி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியலமைப்பு சட்டத்தை மீறி அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் பிறப்பித்த உத்தரவிற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவு தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடமிருந்து உரிய சட்ட நடைமுறைகளை கேட்ட பின் முடிவு எடுக்கும்படி ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் அனுப்பியுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply