உலகக் கிண்ண தகுதிச் சுற்று கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
குறித்த போட்டியில் இலங்கை அணி 128 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஹராரே மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் செஹான் ஆரச்சிகே அதிகபட்சமாக 57 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், நெதர்லாந்து அணியின் விக்ரம்ஜித் சிங் 12 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நெதர்லாந்து அணி 23.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில், அதிகபடியாக மேக்ஸ் டவுட் 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய நெதர்லாந்து அணியின் ஏனைய வீரர்கள் 25க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
பந்துவீச்சில், இலங்கை அணியின் டில்ஷான் மதுஸங்க 18 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 35 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், மகீஷ் தீக்ஷன 31 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.