குருந்தூர் மலை விவகாரம் – சர்வதேசம் எதிர்வினையாற்ற வேண்டும் என்கிறார் சம்பந்தன்!

இலங்கையில் தற்போது தமிழ் மக்களின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை குருந்தூர்மலை சம்பவம் சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுகின்றது.

இது தொடர்பில் உரிய கவனத்தை சர்வதேசம் செலுத்த வேண்டும், உடன் எதிர்வினையாற்ற வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலைச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “குருந்தூர்மலைக்கு நீதிமன்றத்தின் அனுமதியுடன் பொங்கலுக்குச் சென்ற தமிழ் மக்கள் மீது பிக்குகள் தலைமையிலான சிங்களவர்களும், பொலிஸ் படைகளும் அட்டூழியம் புரிந்து தமிழ் மக்களைப் பொங்கல் செய்யவிடாது திருப்பியனுப்பியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

நீதிமன்றின் அனுமதி இருந்தாலோ இல்லாவிட்டாலோ எம் சொந்தச் சமயத்தைப் பின்பற்றுவதற்கும் சமயத்தலங்களை வழிபடுவதற்கும் சுதந்திரம் உண்டு.

அச் சுதந்திரத்தைப் பொலிஸ் படைகளும், பிக்குகளும் தடுக்கலாம் என்ற நிலை இருந்தால் இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக கௌரவமாக வாழ்வதற்கு இடமில்லை என்பதை இது வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றது.

தமிழ் மக்கள் மீதான இவ் அட்டூழியத்தையும் அராஜகத்தையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், அரசு, அமைச்சரவை, பொலிஸ்மா அதிபர் ஆகியோர் உடன் விசாரணை நடாத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.” – எனக் கூறினார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply