2023 ஆம் ஆண்டில் மொத்தம் 63 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்ட மருந்துகளில் சில திரும்பப் பெறப்பட்டுள்ளன எனவும், நிறுத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது நிறுத்தப்பட்டுள்ளன எனவும் ரத்நாயக்க வலியுறுத்தினார்.மருந்துகளைத் திரும்பப் பெறுவதற்கு வழிவகுத்த தரக் குறைபாடுகள் அசாதாரணமானது அல்ல என்றும் கடந்த காலங்களில் அவதானிக்கப்பட்டது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சில தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்கள் இந்த விவகாரத்தை பரபரப்பானதாக மாற்றுவது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், 2017 ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 585 தரக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் ரத்நாயக்க தரவுகளை வழங்கினார். அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் 2019 இல் பதிவாகியுள்ளதோடு பதிவாகிய வழக்குகள் 96 ஆகக் காணப்படும் அதே நேரத்தில், 2022 இல் தர சோதனையில் 86 மருந்துகள் தோல்வியடைந்தன.
மேலதிக விசாரணையின் படி, தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் 53 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும், சில மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும் ஏனையவை பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து வந்தவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.