இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட குரு முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை நேற்று மாலை வழிபட்டனர்.
அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள்
அந்த அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்று அவர்கள் நல்லூர் கந்தனை தரிசித்திருந்தனர்.
குறித்த விடயம் தற்பொழுது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும் இன்றைய தினம் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்தேன் என இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி நல்லூர் ஆலயமுன்றலில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி இன்று நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் ஆலயத்திற்குள் சென்று வெளியே வந்த பின் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,