கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வார இறுதியில் அதிசொகுசு தொடருந்தை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த தொடருந்து சேவை அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடருந்தில் முதலாம் வகுப்பு ஆசனக் கட்டணம் 4,000 ரூபாவாகவும், இரண்டாம் வகுப்பு ஆசனக் கட்டணம் 3,000 ரூபாவாகவும், மூன்றாம் வகுப்பு ஆசனக் கட்டணம் 2,000 ரூபாவாகவும் அறவிடப்பட உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்கிஸையில் இருந்து, காங்கேசன்துறைக்கும், காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸைக்கும், இந்த தொடருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கல்கிசை தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த தொடருந்து சனிக்கிழமை காலை 6 மணிக்கு காங்கேசன்துறையினை சென்றடையும்.
காங்கேசன்துறையில் நிறுத்தப்பட்ட தொடருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு கல்கிசை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கும் மற்றும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு கல்கிசை தொடருந்து நிலையத்தை சென்றடையும்.
இந்த யாழ் நிலா சொகுசு ரயிலில் மூன்றாம் வகுப்பில் 106 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 128 இருக்கைகள், முதல் வகுப்பில் 336 இருக்கைகள் மற்றும் உள் துப்புரவு வசதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உள்ளது.