ஜப்பானின் மக்கள்தொகை குறைகிறது : வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது!

ஜப்பானியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வேகத்தில் குறைந்துள்ள அதே நேரத்தில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ஜப்பானிய அரசாங்கத் தரவு இன்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஜப்பானிய சமுதாயம் நாடு முழுவதும் முதுமை அடைந்து வருவதாகவும், சுருங்கி வரும் மக்கள் தொகையை ஈடுசெய்வதில் வெளிநாட்டுப் பிரஜைகள் எப்போதும் பெரிய பங்கை வகிப்பதாகவும் தரவுகள் காட்டுகின்றன.

உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஜனவரி 1, 2023 இன் குடியுரிமைப் பதிவுத் தரவுகளின்படி, ஜப்பானிய குடிமக்களின் எண்ணிக்கை 14 ஆவது ஆண்டில், 122.42 மில்லியனாகக் குறைந்துள்ளது.

முதல் முறையாக, அனைத்து 47 மாகாணங்களிலும் ஜப்பானிய குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று தரவு சுட்டிக்காட்டுகிறது.

ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2.99 மில்லியனாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 10.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு அமைச்சகம் தரவைக் கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து ஆண்டுக்கு ஆண்டு மிகப்பெரிய அதிகரிப்பாக காணப்படுகின்றது.

ஜனவரி 1, 2020 நிலவரப்படி, கொவிட் – 19 தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவுவதற்குச் சற்று முன்பு, ஜப்பானில் 2.87 மில்லியன் வெளிநாட்டினர் வசித்து வந்தனர்.

ஜப்பானின் மொத்த மக்கள் தொகை 125.42 மில்லியனாகக் குறைந்ததாகவும் ஏறக்குறைய 5 லட்சத்து 11 ஆயிரமாக குறைந்துள்ளது என்று புதிய தரவு சுட்டிக்காட்டுகிறது.

குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக 2008 இல் உச்சத்தை எட்டியதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்து, கடந்த ஆண்டு மிகக் குறைந்த அளவை எட்டியது.

இதனிடையே, ஜப்பானிய அரசு சனத்தொகையை பெருக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகளை அடைவதற்கு 2040 ஆம் ஆண்டளவில் ஜப்பானுக்கு நான்கு மடங்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக டோக்கியோவைச் சேர்ந்த பொது சிந்தனைக் குழுக்கள் கடந்த ஆண்டு தெரிவித்தது.

டோக்கியோவில் 4.2 சதவிகிதத்துடன்  5 லட்சத்து 81 ஆயிரத்து 112 வெளிநாட்டவர்கள்  காணப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply