கொரோனா காற்றில் பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக 200க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கூறிய நிலையில், அதனை ஆய்வாளர்கள் அளித்த ஆதாரங்களை ஏற்கிறோம் என உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும். ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவும். பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தேய்க்கும்போது வைரஸ் பரவும் என உலக சுகாதார அமைப்பு முன்பு அறிவுறுத்தியது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக உலக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஒருவர் தும்மியப்பின், இருமியப்பின் அவரின் எச்சலின் சிறிய நுண்துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை மற்றொருவர் சுவாசிக்கும் போது, அவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என அறிவிக்க வேண்டும் என்று 32 நாடுகளைச் சேர்ந்த 239 அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் உலக சுகாதார அமைப்புக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும், ஆய்வறிக்கையைக் குறிப்பிட்டும் பரிந்துரையை மாற்றக் கோரினர். இதனை ஆய்வு செய்துவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன்பின்னர், கொரோனா வைரஸ் தடுப்பின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது: கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் பரவும் என்று கூறியிருந்தோம். ஆனால், ஆய்வாளர்கள் காற்றின் மூலம் வைரஸ் பரவும் சாத்தியம் இருக்கிறது என ஆய்வறிக்கையை அளித்தனர். காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதை உலக சுகாதார அமைப்பு ஏற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா தடுப்பு மற்றும் நோய்த்தொற்றுப் பிரிவின் தலைமை அதிகாரி பென்னிடெட்டா அலிகிரான்ஸ் கூறியதாவது: கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அது உறுதியானது அல்ல. பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள். மூடப்பட்ட இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடியிருப்பது, காற்று வசதி இல்லாத இடம் போன்றவற்றில் கொரோனா வைரஸ் காற்றில் பரவும். அதேநேரத்ததில் ஆய்வாளர்கள் அளித்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்புக்குக் கடிதம் எழுதிய ஆய்வாளர்களில் ஒருவரும் கொலராடா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளருமான ஜோஸ் ஜெமினிஸ் கூறுகையில், ‛நாங்கள் அளித்த ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஏற்க வேண்டும் என விரும்புகிறோம். நாங்கள் அளித்த அறிக்கை உலக சுகாதார அமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் என நினைக்கவேண்டாம். இது அறிவியல் ரீதியான விவாதம், மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக வேண்டும். அவர்களுடன் பலமுறை கூறியபோது, ஆதாரம் கேட்டதால், அதற்கான ஆதாரங்களை இப்போது அளித்துள்ளோம்,’ என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir