காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்பான தேசிய விசாரணையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கனடாவுக்கு, இலங்கையின் போர் சம்பவங்களை இனப்படுகொலை என்று கூறுவதற்கு உரிமை இல்லை என புதிய மக்கள் முன்னணி, கடந்த புதன்கிழமை கனேடிய உயர் ஸ்தானிகராலயத்திடம் கையளித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷுக்கு அனுப்பிய கடிதத்தில் புதிய மக்கள் முன்னணி, இனப்படுகொலையை இலக்காகக் கொண்ட யுத்தம் என்று ஐக்கிய நாடுகள் கூட நிராகரித்துள்ளது என்று கூறியுள்ளது.
காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களை கனடா நடத்துகிறது என்ற இந்திய குற்றச்சாட்டை நினைவுபடுத்தும் வகையில், இந்தியாவிலும் இலங்கையிலும் பிரிவினைவாதத்தை கனடா ஊக்குவிப்பதாக புதிய மக்கள் முன்னணி குற்றம் சாட்டியது.
இலங்கையின் உள்விவகாரங்களில் கனேடிய உயர்ஸ்தானிகரின் சமீபத்திய தலையீடுகளையும் கட்சி விமர்சித்ததுடன், உயர்ஸ்தானிகர் வால்ஷ் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறாரா? என்று யோசிப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.