தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்- எஸ்.எம்.மரிக்கார்

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து, ஐக்கிய மக்கள் சக்தி இன்று சுட்டிக்காட்டியதுடன், இதற்கு ஆதரவளிக்குமாறு ஏனைய கட்சிகளையும் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார், பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தில் கையொப்பமிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட சபையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராக இருக்க வேண்டும் என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்காலத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறும் என்று தெரிவித்திருந்தார். எனவே, சபையைக் கலைத்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் தீர்மானத்தை ஆதரிக்குமாறு அவருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் நாங்கள் சவால் விடுக்கின்றோம் என மரிக்கார் கூறினார்.

பாராளுமன்றம் இன்று குழப்பமடைந்துள்ளதோடு மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எனவே, அது கலைக்கப்படுவதே சிறந்தது. யாருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சபையை கலைத்து புதிய பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் கொண்டு வருவதை அவர் நிராகரிக்கவில்லை.

கலைப்புக்கான தீர்மானத்தை தனது கட்சி கொண்டுவருமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எங்கள் அரசியல் வியூகங்களை நாங்கள் முன் கூட்டியே வெளிப்படுத்தவில்லை எனப்   பதிலளித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply