வவுனியா சிறைச்சாலைக்குள் அம்மை நோய் பரவி வருவதால் இரண்டு வார காலத்திற்கு சிறைச்சாலை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சிறைச்சாலைக்கு பார்வையாளர்கள் நுழைவது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கைதிகளை சட்ட நடவடிக்கைகளுக்காக வெளியே அழைத்துச் செல்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறை வளாகத்தில் குறைந்த இடவசதி இருப்பதால் நோய் வேகமாக பரவி வருவதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா சிறைச்சாலையில் 400 க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேவேளை, அங்கு கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 85 ஆக உள்ளது.
வவுனியா சிறைச்சாலை சில தினங்களின் பின்னர் வழமையான நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.