சிங்கப்பூரில் இருந்து மலேசியாவின் பினாங் நகருக்கு ராயல் கரீபியன் சொகுசு கப்பலில் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர் இந்திய தம்பதிகளான 70 வயது ஜெகதீஷ் சஹான் மற்றும் 64 வயது ரீட்டா சஹானி.
ஜூலை 31ம் திகதி மாலை 4:30 மணியளவில் சிங்கப்பூர் கடற்கரையில் இருந்து அந்த ராயல் கரீபியன் சொகுசு கப்பல் மலேசியாவின் பின்னாங்கு நகரை நோக்கி தனது பயணத்தை துவங்கி உள்ளது. 39 வயதான அபூர்வ் சஹானி என்பவருடைய தாய் மற்றும் தந்தையாகிய மேற்கூறிய இருவரும் அந்த கப்பலில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது மனைவியை காணவில்லை என்று, கணவர் ஜெகதீஷ் கப்பல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக இந்த தகவல் வெளிநாட்டில் இருக்கும் மகன் அபூர்வ் அவர்களுக்கும் அளிக்கப்பட்டது.
தனது தாய்க்கு நீச்சல் தெரியாத காரணத்தினால், அவர் கப்பலில் தான் எங்காவது இருப்பார் என்றும், அவரை நன்றாக தேடி பார்க்க பேண்டும் என்றும் கப்பல் அதிகாரியிடம் அவர் கூறினார்.
ஆனால் அதற்கு இடையில் கப்பலின் பாதுகாப்பு அமைப்பு ஒன்று, கப்பலில் இருந்து ஏதோ ஒன்று கடலில் விழுந்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அது தனது தாயாக இருக்காது என்று அவர் கூறிய நிலையில், 64 வயதான ரீட்டா சஹானி கடலில் விழுந்த காணொளியை தற்பொழுது கப்பல் நிர்வாகம் அபூர்வ்க்கு பகிர்ந்துள்ளது.
இதை பார்த்த அவர் அதிர்ந்து, தனது தாய் கடலில் தான் விழுந்துள்ளார் என்பதை மனமுடைந்து ஏற்றுக் கொண்டுள்ளார். தற்பொழுது சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம், அவர்கள் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் அந்த 64 வயது பெண்மணியை தேடி வருகின்றனர். இந்நிலையில் மகன் அபூர்வ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் “எனக்காக போராடிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், எங்களுக்கு அனுப்பப்பட்ட வீடியோவில் இருந்து, எனது தாய் இறந்துவிட்டார் என்பதை நான் உணர்வதாகவும் கூறியுள்ளார்.