நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக விசேட ரயில் சேவை!

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை இயக்கப்படும் ‘யாழ்நிலா ஒடிசி’ விசேட சுற்றுலா ரயில் ஓகஸ்ட் 04 ஆம் திகதி முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

விசேடமாக நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ளும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இந்து பக்தர்களுக்கு பெரும் உதவியாக இச்சேவை அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

காங்கேசன்துறை மற்றும் வவுனியாவில் இருந்து கல்கிசைக்கு பயணிப்பதற்கு முதலாம் வகுப்பு ரூ.4000.00 ரூபாவாகவும், இரண்டாம் வகுப்பு ரூ.3000 ரூபாவாகவும், மூன்றாம் வகுப்பு ரூ.2000 ரூபாவாகவும் அறவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையான புகையிரத பாதை முற்றிலும் புனரமைக்கப்பட்டதன் பின்னர் காங்கேசன் துறை வரை மணிக்கு 100 கிலலோ மீட்டர் வேகத்தில வேகமாகவும், பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடனும் பயணிக்கும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் கல்கிசையில் இருந்து 4ஆம் திகதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு 5ஆம் திகதி காலை 5.30 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும் என அமைச்சர் தெரிவித்தார்.

ஓகஸ்ட் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் குறித்த ரயில், மறுநாள் காலை 5:20 மணிக்கு கொழும்பை சென்றடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஓகஸ்ட் 18 ஆம் திகதி முதல் குறித்த ரயிலை தினமும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், ஆசன வசதிகளை ஒன்லைன் மூலமும் பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் டிசம்பர் 31ம் திகதி வரை தொடர்ச்சியாக இயங்கும் எனவும் தெரிவித்தார்.

புதிய இரவு நகர்சேர் கடுகதி புகையிரதம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரையும் ஞாயிறு இரவு 9.30 இற்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு கல்கிசை வரையும் சேவையில் ஈடுபடும் எனத் தெரிவித்துள்ளார்.

5 மாதங்களின் பின்னர் எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி முதல் அநுராதபுரம் மற்றும் மஹவைக்கிடையிலான ரயில் பாதையை நவீன மயப்படுத்துவதற்காக இந்த ரயில் சேவையை குறுகிய காலம் நிறுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply