மாமாங்கேஸ்வரர் ஆலய கொடியேற்ற திருவிழா

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தின் ஆடி அமாவாசை மகோற்ஷபம் இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் மூல மூர்த்திக்கு கும்ப அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகோற்சவ கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தப்பத்துக்கு அருகில் விசேட பூசை இடம்பெற்றது.

சரியாக நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டதுடன் கொடியேற்றத்தினை தொடர்ந்து தம்பத்துக்கு அபிஷேகமும் செய்யப்பட்டு விசேட பூசையும் இடம்பெற்றது. இதன்போது கொடியேற்ற பிரதம குருவினால் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விநாயகப்பெருமான் உள் வீதியுலா வந்து வசந்த மண்டபத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றன. உற்சவங்கள் யாவும் பிரம்ம ஸ்ரீ ஆதி செளந்தராஜ குருக்கள் தலைமையில் நடாத்தப்படுகின்றது

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக அடியார்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பேணி பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டமையினை அவதானிக்கக் கூடியவாறு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir