ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் பிரான்ஸ் இரண்டாவது இடத்துக்கு விரைவில் முன்னேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய பிரான்ஸ் மேற்கொண்டுள்ள புதிய ஆயுத ஏற்றுமதி ஒப்பந்தம் பிரான்ஸ் பாதுகாப்பு துறையின் வேகமான முன்நகர்வை எடுத்துக்காட்டுகிறது.
இதன்படி பிரான்ஸிடம் இருந்து இந்தியா 6 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 26 ரபேல் போர் விமானங்களையும், கட்டார் பிரான்சிடம் இருந்து 24 ரபேல் போர் விமானங்களையும் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலக ஆயுத ஏற்றுமதியில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.1 சதவீதமாக இருந்த பிரான்ஸின் ஆயுத ஏற்றுமதி பங்கு தற்போது 11 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதே சமயம் உக்ரைன் உடனான போர் நடவடிக்கை காரணமாக ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி 22 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் உலக அளவில் ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக விரைவில் முன்னேற வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டின் கடைசியில் மற்றும் 2023ம் ஆண்டில் வந்துள்ள ஆர்டர்கள் சீரான முறையில் தொடரும் என்றும், பிரான்ஸ் போக்கு தெளிவாக இருப்பதாகவும் SIPRI அறிக்கையின் ஆசிரியர் பீட்டர் வெஸ்மேன் தெரிவித்துள்ளார்.