நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் 2ஆம் கட்ட பாதிப்புகளுக்கான முழுபொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
அக்குறஸ்ஸயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா வைரஸ் பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரையில் தேர்தலை நடத்த வேண்டாம் என்று நாங்கள் தெரிவித்தோம்.
எனினும், ஆளும் தரப்பினர் நாங்கள் தேர்தலுக்கு அச்சம் கொண்டே இவ்வாறு தெரிவிப்பதாக காண்பித்து வந்தனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்த போதும் அதனையும் ஆளும் தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களின் சுகாதார பாதுகாப்பையும் கருத்திற் கொள்ளாது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்தனர்.
வைரஸ் பரவலின் இரண்டாம் கட்ட அலை தொடர்பாக தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதில் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கமே அதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.