நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா நுழைவாயில் பகுதியான டொப்பாஸ் கிராமத்தில் உள்ளூர் துப்பாக்கி வெடித்து கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் (07) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த கணவன் மனைவியின் சடலங்கள் பாதுகாப்பான இடத்தில் அடையாளமிட்டு புதைக்கப்பட வேண்டும் என விசேட உத்தரவு பிறப்பித்த நுவரெலியா மாவட்ட நீதவான் நாலக்க சஞ்சீவ வீரசிங்க சடலங்கள் புதைக்கப்படும் இடத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை சட்ட வைத்தியர் ஒருவரின் ஊடாக மேற்கொண்ட பின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதவான் இச் சம்பவம் தொடர்பான அறிக்கை மற்றும் சட்டவைத்தியரின் அறிக்கையை சம்பவம் தொடர்பான வழக்கில் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் சமர்பிக்க வேண்டும் எனவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மரண விசாரணை நடத்திய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணையை நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் இருந்த (சம்பவத்தி்ல் உயிரிழந்த) எண்டன் தாஸ் என்பவரின் தாய் (வயது 54) இவரிடம் விசாரணை செய்த பொலிஸார் அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
இதில் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் எனது மகனும் மருமகளும் வசித்து வந்தனர். எனது மகன் தாஸ் தின கூலிக்கு மரக்கறி தோட்டத்தில் தொழில் செய்கிறார். எனது மருமகள் ரீட்டா வீட்டு மனைவியாக இருந்து வருகிறார். நான் கொழும்பில் வீடொன்றில் பணியாளரக தொழில் செய்து வருகிறேன். என தெரிவித்த அவர் மகனின் வீட்டுக்கு (05.08.2023) அன்று கொழும்பில் இருந்து வருகை தந்தேன் எனவும் தெரிவித்தார்.
அதேநேரம் சம்பவ தினமான (07.08.2023) அன்றைய தினம் இரவு மகனுக்கும், மருமகளுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது சமையல் அறையில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது, நான் சமையல் அறைக்குள் சென்று பார்த்தபோது மருமகள் இரத்த காயங்களுடன் கிடந்தார்.
மகனிடன் ஏன் என கேட்டப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து விட்டதாகவும் , யாரையாவது உதவிக்கு அழைக்குமாறு கூறினார்.
உடனே நான் வெளியில் வந்து அயலவர்களை அழைத்தேன் மீண்டும் வெடி சத்தம் கேட்டது ஒடி பார்த்தேன் மகன் தலையில் இருந்து அதிக இரத்தம் வந்த நிலையில் தரையில் கிடந்தான்.
அருகில் துப்பாக்கியும் இரத்தத்தில் கிடந்தது. பின் பதற்றமாகிய நான் இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் உதவியுடன் 119க்கு அழைப்பு விடுத்த நிலையில் நுவரெலியா பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர் என வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
அதேநேரம் தாயின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு எண்டன் தாஸ்க்கு உள்ளூர் துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது? மகனுக்கும் மருமகளுக்கும் வாய்தர்க்கம் ஏன் ஏற்பட்டது? துப்பாக்கி எவ்வாறு வெடித்தது? என்ற மூன்று கேள்விகளுக்கு விடை காணும் வகையில் நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த நீதவான் நாலக்க சஞ்சீவ வீரசிங்க மற்றும் சட்ட வைத்தியர் எம்.எம்.குணத்திலக்க ஆகியோர் விசாரணைகளை செய்த பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு அமைய சடலங்கள் மீட்கப்பட்டு மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
அத்துடன் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை சட்ட வைத்தியர் எம்.எம்.குணத்திலக்க முன்னிலையில் இன்று (09.08.2023) காலை 9.30 மணிக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.