நாட்டில் நிலவும் வறட்சியால் 97 ஆயிரம் பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 97ஆயிரத்து 579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியால் வடக்கு மாகாணமே அதிக பாதிப்புகளை எதிர் நோக்கியுள்ளது.

இதேவேளை, நிலவும் கடும் வறட்சி காரணமாக வெவ்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு அடிக்கடி நீர் அருந்துமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் பு.விஜேசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலையினால் வெயிலில் தேவையின்றி நடமாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுடன் குறிப்பாக, காலை 11.00 மணிமுதல் மாலை 3.00 மணிவரையான காலப்பகுதியில் வெயிலில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, பிளாஸ்ரிக் குடிநீர் போத்தல்களை பயன்படுத்துவது அபாயகரமானது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கியமாக அதிக குளிர்பானம் அல்லது இனிப்பு பானங்களை அருந்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் வைத்தியர் இ.ஏ.எஸ்.டி.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டில் நிலவும் வறட்சியுடனான காலநிலையால் யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, குருணாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரி, முல்லைத்தீவு உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் 30 ஆயிரத்து 155 குடும்பங்களைச் சேர்ந்த 97ஆயிரத்து 579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணமே அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. அங்கு 22ஆயிரத்து 859குடும்பங்களைச் சேர்ந்த 73ஆயிரத்து 04 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 21ஆயிரத்து 714 குடும்பங்களைச் சேர்ந்த 69ஆயிரத்து 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி மற்றும் சங்கானை ஆகிய பகுதிகளில் வறட்சி மற்றும் குடிநீரின்றி மக்கள் பல்வேறு அசெளகரியங்களை சந்தித்துள்ளனர். சங்கானையில் 15 ஆயிரத்து 967 குடும்பங்களைச் சேர்ந்த 49ஆயிரத்து 260பேரும் சாவகச்சேரியில் 3ஆயிரத்து 185 குடும்பங்களைச் சேர்ந்த 11ஆயிரத்து 760 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலையில் 08 ஆயிரத்து 979 பேரும் குருணாகலில் 5 ஆயிரத்து 655 பேரும் இரத்தினபுரியில் 9 ஆயிரத்து 501 பேரும் புத்தளத்தில் 215 பேரும் மன்னாரில் 3 ஆயிரத்து 244 பேரும் பதுளையில் 440 பேரும் முல்லைத்தீவில் 563 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிலவும் வறட்சியால் நீர் ஆதாரங்கள் மாசடைவதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகின்றது. கொதித்து ஆறிய நீரை பருகுவதன் மூலம் இந்நோய்களை தவிர்க்க முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வறட்சியால் நீர் ஆதாரங்கள் வற்றிப்போயுள்ளதால் நீரில் கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. இந்நீரை பயன்படுத்தும்போது வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. நீங்கள் அருந்தும் குடிநீர் சுத்தமாக இல்லை என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், குறைந்தபட்சம் தண்ணீரைக் கொதிக்க வைத்து அருந்துங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply