சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களைக் கடத்தும் வெள்ளைவான் கொண்ட குழு ஒன்று உலாவுவதால் பிரதேச மக்களை மிகவும் விழிப்புடன் இருக்குமாறு சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசலினால் விடுக்கப்படுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப்பள்ளிவாசலின் செயலாளர் ஐ.எல்.எம் மன்சூரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தின் மாளிகா வீதியிலுள்ள சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு அருகாமையில் கடந்த திங்கட்கிழமை, பாடசாலை செல்லும் மாணவியொருவரை வெள்ளைவான் கொண்ட ஒரு குழுவினரால் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் மதிய நேரமான முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை பிற இனத்தவர்கள் பர்தா உடை அணிந்து யாசகம் கேட்டு வீடுகளுக்குள் நுழைகின்றனர்.
இதன் மூலமாக கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. எனவே, தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கோ அல்லது வெளி இடங்களுக்கோ அனுப்பும் போது கவனமாக இருந்து மிகவும் பாதுகாப்பாகச் செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
தங்களின் சுற்றுப்புறங்களை உன்னிப்பாக அவதானித்து, தங்கள் பிரதேசங்களை அண்மித்த இடங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதாவது வாகனங்களோ அல்லது மனிதர்களோ நடமாடுமாடினால் அதனை பள்ளிவாசலிலோ அல்லது பொலிஸாரிடமோ அறிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அத்துடன் தங்கள் பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பகல் வேளைகளில் தங்கள் வீடுகளுக்கு யாசகம் கேட்டு வரும் பிற இனத்தவர்களிடம் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.