கொலம்பியாவில் இடம்பெற்று வரும் பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது சம்பந்தமான கொலைகளுடன் தொடர்புடைய ஒரு குழுவின் தலைவராக விளங்கியவர் ஒடோனியல் என அழைக்கப்பட்ட டெய்ரோ அன்டோனியோ உசுகர். வடக்கு கொலம்பியாவின் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அமெரிக்காவிற்குள் கடத்தி வரப்பட்ட பல தொன்கள் போதை பொருள் கடத்தலை ஒடோனியல் நிர்வகித்துள்ளார். இதனால் அவரை அமெரிக்கா தேடி வந்தது. ஒடோனியல் தலைக்கு அமெரிக்கா சுமார் 40 கோடி ரூபா பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு அவரது மறைவிடத்தில் இருந்து ஒடோனியல் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனையை அமெரிக்க அரசாங்கம் வழங்க கூடாது என்று கொலம்பியா கேட்டுக்கொண்டது. இந்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.
அதன்பின்னர் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஒடோனியல் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையின்போது, தனது குற்றங்களை ஒப்புக்கொள்வதாகவும், தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஒடோனியல் கூறினார். இதனையடுத்து அவருக்கு நீதிமன்றம் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.