பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக் காலமாக நகை திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை உட்பட ஏனைய பிரச்சினைகளால் சிலர் மக்கள் மத்தியில் வீணான குழப்பங்களை ஏற்படுத்தி இவ்வாறான திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் 8 பவுண் பெறுமதியுள்ள தங்க தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதியான நகைகள் சில தொடர்ச்சியாக பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் திருடப்பட்டுள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, வீதி ஓரங்கள் பொது இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் இரவு மற்றும் பகல் வேளைகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் யாராவது நடமாடினால் உடனடியாக பொலிஸாருக்கு அறியத் தருமாறு கேட்டுகொண்டுள்ளனர்.
இதேவேளை, பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்து காணப்படுவதாக அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்வதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.