நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி மூலம் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி, பேருந்துகள், லொறிகள், டாங்கர்கள், பவுசர்கள் மற்றும் பாரவூர்திகள் உள்ளிட்ட பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் கேள்விக்குரிய வர்த்தமானி அறிவித்தலில் தளர்த்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு, நேற்றயதினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் இணக்கப்பாட்டுக்கு அமைய அரச தலைவரினால் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.