
கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் அவர்களது சம்பளத்தின் அரைப்பங்கு அல்லது ஆகக் கூடிய சம்பளமான 14,500 ரூபாவை செப்டெம்பர் மாதம் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் அமைச்சர் தினேஸ் குணவர்தன மற்றும் தனியார் துறை நிறுவன உரிமையாளர்களுடன் எட்டப்பட்ட உடன்படிக்கையை செப்டெம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.