இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு 1980 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்ட போர 12 ரக 104 துப்பாக்கிகள் இன்னும் மீள கையளிக்கப்படவில்லை என அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மேல் மாகாண ஆளுநராக இருந்த போதே இந்த துப்பாக்கிகளை பெற்றுக்கொண்டதாகவும் 1980ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 154 அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட 698 துப்பாக்கிகளை அவர்கள் இதுவரையில் மீள கையளிக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் பிரதிநிதிகளால் மீள வழங்கப்படாத துப்பாக்கிகளுள் 9 மில்லிமீட்டர் அரை தானியங்கி கைத்துப்பாக்கிகள் 41 மற்றும் போர 12 ரக துப்பாக்கிகள் 656 அடங்குவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
போர 12 ரக துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க தவறிய முக்கிய அரசியல்வாதிகளுள் எச்.எஸ்.ஏ கருணாரத்ன, எலிக் அலுவிஹாரே, பீட்டர் கெனமன், பீ தயாரத்ன, டியூடர் ஜயரத்ன, டிரோன் பெர்னாண்டோ, நந்தா மெத்தியூ மற்றும் காமினி அத்துகோரல போன்றோர் உள்ளடங்குகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, எச்.எஸ்.ஏ. கருணாரத்ன 16 துப்பாக்கிகளையும், அலிக் அலுவிஹார 05 துப்பாக்கிகளையும், பீட்டர் கென்னமன் 01 துப்பாக்கியையும், பீ.தயாரத்ன 05 துப்பாக்கிகளையும், டுடர் ஜயரத்ன 05 துப்பாக்கிகளையும், டிரோன் பெர்னாண்டோ 05 துப்பாக்கிகளும், நந்தா மெத்தியூ 05 துப்பாக்கிகளும், காமினி அத்துகோரல 5 துப்பாக்கிகளும் மீள வழங்க தவறியுள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்வாறு குறித்த துப்பாக்கிகள் கையளிக்கப்படாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்கள் வினவிய போது,
அவரால் மீள வழங்க தவறிய துப்பாக்கிகள் அனைத்தும் 1988ஆண்டு ரஞ்சன் விஜேரத்ன பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மூலம் பொறுப்பேற்கப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, அண்மையில் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கேட்ட வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இந்த தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறு ஆயுதங்களை மீள ஒப்படைக்கத் தவறிய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது சுகயீன நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், 1989ஆம் ஆண்டு முதல் இது வரையான காலப்பகுதி வரையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தானியங்கி துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், அதன் பின்னர் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இவ்வாறான ஆயுதங்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.