பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்டதை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று இடைநிறுத்தியுள்ளது எனவும் இதனால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் இம்ரான் கானின் வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா கூறியுள்ளார்.
அவர் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தபோது சட்டவிரோதமாக அரச சொத்துக்களை விற்றதற்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் ஓகஸ்ட் 5 ஆம் திகதி அன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேவேளை, தண்டனையின் விளைவாகவும், வரவிருக்கும் மாதங்களில் தேசிய தேர்தல் எதிர்பார்க்கப்படுவதாலும், இம்ரான் கானுக்கு மேலும் ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
குறித்த தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார் எனினும் உயர் நீதிமன்றத்தின் முடிவின் விளைவாக அவர் தானாகவே விடுவிக்கப்படுவாரா என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையும் ஏனைய வழக்குகளில் அவரைக் கைது செய்ய அனுமதிக்கும் பிற நீதிமன்ற உத்தரவுகளின் காரணமாகவும் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை எவ்வாறு பாதிக்கப்படும் என்பது உடனடியாகத் தெரியவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன .