ஐரோப்பிய நாடுகளில் சுகாதார துறை அடிப்படை மனித உரிமையாக காணப்படுகின்ற நிலையில் இலங்கையில் சுகாதாரம் வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சுகாதாரதுறை வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளமையானது சுகாதார அமைச்சருக்கும் அமைச்சரை சார்ந்தவர்களுக்கும் வருமானம் தருகின்ற துறையாக மாறியிருக்கின்றது.
அத்துடன் சில வைத்திய சங்கங்களும் முகவர்களின் உதவியுடன், தங்களுக்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்கின்றன.
நீதியான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் ஒருபோதும் செயற்பட்டதில்லை.
இலங்கையினுடைய சுகாதார துறை பகல் கொள்ளையில் ஈடுபடுகின்ற மாபியாக்களின் மையமாக விளங்குகிறது.
பேராதனை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி, மட்டக்களப்பு பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகள் ஒவ்வொரு வருடமும் எத்தனை வைத்தியர்களை உருவாக்குகின்றன.
மருத்துவ கற்கையை நிறைவு செய்த வைத்தியர்கள் எத்தனைப்பேர் நாட்டில் கடமையாற்றுகின்றனர்.
கற்கையை நிறைவு செய்த தாதியர்கள் எத்தனைப்பேர் நாட்டில் கடமையாற்றுகின்றனர்.
அதிலும் தமிழ் தாதியர்கள் திட்டமிட்டவாறு தாதியர் சேவையிலிருந்து புறக்கணிக்கப்படுகின்றார்கள்.
சிங்கள தாதிய மாணவர்கள் மாத்திரமே அதிக சட்டத்திருத்தங்களோடு உள்வாங்கப்படுகின்றார்கள்.
தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் திட்டமிட்டு தாதியர் சேவையிலிருந்து தவிர்க்கப்படுகின்றார்கள்.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமையப்பெற்றுள்ள வைத்தியசாலைகளில் தாதியர்கள் அற்ற நிலை காணப்படுகின்றது.
தனக்கு எதிரான உரையையேனும் செவிமடுக்க முடியாதவர் சுகாதார அமைச்சராக பதவி வகிக்க தகுதியற்றவர். ஆகவே அவரை பதவி விலக்குங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.