இலங்கை மத்திய வங்கியில் ஏற்பட்ட வங்குரோத்து நிலை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வங்குரோத்து நிலை தொடர்பாக ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தலைமையில் நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டது.
குறித்த குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அஜித் நிவார்ட் கப்ராலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவிற்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற விடயங்கள் தொடர்பில் அவர்களிடம் சாட்சியங்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக பொருளாதார நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கைகளின் ஆய்வும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் வரி குறைப்பு உள்ளிட்ட பல காரணிகள் நாட்டின் பொருளாதாரத்தின் வங்குரோத்து நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து பல்கலைக்கழக பொருளாதார நிபுணர்கள், தமது அறிக்கையை நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.