இந்தியாவைவிட்டு வெளியேற கனடா தூதருக்கு உத்தரவு

இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு கனடாவின் தூதரக அதிகாரிக்கு இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் அந்த நாட்டுக் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவைவிட்டு வெளியேறுமாறு அந்த நாட்டு அரசு திங்கட்கிழமை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கமரூன் மக்கேவை நேரில் ஆஜராகுமாறு இந்திய மத்திய வெளியுறவுத் துறை சம்மன் வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் நேற்றுக் காலை ஆஜரான கமரூனை 5 நாள்களுக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply