இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சிதத் வெட்டிமுனி தலைமையில் 3 பேர் கொண்ட சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலினை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை செயற்பட வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தாக்கல் செய்த ரீட் மனுவை பரிசீலித்தத மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சமத் மொராயிஸ் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை , விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதற்காக சர்வதேச மற்றும் தேசிய கிரிக்கெட் சபைகளை கண்காணிக்கவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் 3 பேர் கொண்ட சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமித்தார்.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சிதத் வெட்டிமுனி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர் சட்ட ஆலோசகர் ரகித ராஜபக்ஷ ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதற்காக சர்வதேச மற்றும் தேசிய கிரிக்கெட் கவுன்சில்கள், கூட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் கண்காணிக்கவும், தொடர்பு கொள்ளவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.