உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதாக தேர்தல் ஆணைக்குழு இதுவரை அறிவிக்கவில்லை.
அரசாங்கமும் தேர்தலை பிற்போடவில்லை. தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை.
அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்திருக்கும் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு ஜனநாயகத்துக்கு விராதேமான முறையில் முயற்சித்து வருகிறது.
எனினும், நாடாளுமன்றின் அனுமதி இல்லாமல் வேட்புமனுகளை நிராகரிக்க முடியாது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு உறுதியான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.
வேட்புமனுக்கள் கோரப்பட்டு, தேர்தல் நடத்துவதற்கு இருக்கும் நிலையில், வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு மாற்றமாக தேர்தலை நடத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தேர்தல் ஆணைக்குழு இருக்கிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது தொடர்பாக நீதிமன்றில் பல வழக்குகளும் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்றம் ஊடாகவோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ நிதியை பெற்று உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நாம் நம்புகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.