அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது.
நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது நிதி கண்காணிப்பு அரச கணக்குகள் பற்றிய குழுவானது வெஸ்மின்ஸ்டர் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றி இந்தக் குழு உருவாக்கப்பட்டது.
ஐ.ஆர்.தம்பிமுத்துவினால் சட்டவாக்கப் பேரவையில் 1921ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைத்த பிரேரணைக்கு அமைய அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அமைக்கப்பட்டது.
ஆரம்பம் முதல் இதுவரை 33 தலைவர்களால் வழிநடத்தப்பட்டுள்ள அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தற்போதைய தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண செயற்பட்டு வருகிறார்.
தற்பொழுது இதன் உறுப்பினர்களாக 31 பேர் காணப்படுகின்றனர்.
அரச கணக்குகள் பற்றிய குழு அரச நிதிக்கு பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும் நாடாளுமன்றத்திற்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவானது பொதுக் கொள்கைகளை நிறைவேற்றுதல் மற்றும் பொது நிதியைப் பயன்படுத்துவதனை மேற்பார்வையிடும் பணியை முன்னெடுக்கிறது.
1923 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி இந்த குழு நியமிக்கப்பட்டு அதன் முதல் கூட்டம் 1923 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்றது.
இதன்படி, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஸ்தாபிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைகின்றது.
இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று காலை 10.30 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.