நான்கு வருடங்களாகியும் அடிப்படை வசதிகள் செய்யப்படாத யாழ் சர்வதேச விமான நிலையம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் பெரியளவில் ஏற்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்தியா மற்றும் கொழும்புக்கு இடையேயான பயணிகள் சேவைகள் இடம்பெற்று வருவதுடன் பெருமளவானவர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

யாழ் விமான நிலையத்தில் பயணிகளை அழைத்து செல்ல மற்றும் வழியனுப்ப காத்திருப்பவர்களுக்கான இடம் மர நிழல் ஒன்றிலேயே அமைந்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மரங்களுக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள கல்லாசனங்களிலேயே பயணிகளும், உடன் வந்தவர்களும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

கோடை காலத்தில் அவை பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும் மழைக்காலங்களில் கல்லாசனங்களில் அமர முடியாது பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

குறிப்பாக பயணிகள் குடிவரவு குடியகல்வு செயற்பாடுகளை முடித்து விட்டு காத்திருப்பிற்கான போதிய இடம் இன்மையால் அவர்களும் இதே பிரச்சினையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், தென்னிந்திய பிரபலங்கள் அதிகளவானவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றனர்.

இவ்வாறான நிலையில் சில உட்கட்டுமான அடிப்படை வசதிகளையாவது ஏற்படுத்துவது பயணிகள் மற்றும் விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தும்.

குறித்த விடயம் தொடர்பில் உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம், இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply