இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி விலகியுள்ளார்.
இதன்படி, இந்த மனு விசாரணையில் பங்குபற்றுவதில் இருந்து நீதியரசர் சமத் மொராயிஸ் விலகியுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன இன்று திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.
சிலாபம் நீதித்துறை வலயத்தில் கடமையாற்றிய சனத் நிஷாந்தவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையே நீதியரசர் மொராயிஸின் மறுப்புக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.
குறித்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் அக்டோபர் 31-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் அன்றைய தினம் புதிய நீதிபதி அமர்வு மனு விசாரணைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
‘அறகலய’ எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதில் நீதிவான்கள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது தொடர்பில் விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் நீதித்துறையின் கௌரவத்தையும் நன்மதிப்பையும் இராஜாங்க அமைச்சர் கெடுத்ததாகக் கூறி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் 23 ஆகஸ்ட் 2022 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிஷாந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகளான பிரியலால் சிறிசேன, விஜித் குமார மற்றும் இலங்கை நீதிச் சேவை சங்கம் ஆகியோரினால் குறித்த மனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.