ஒரு தசாப்தத்தின் பின்னர் இலங்கை-இஸ்தான்புல் இடையே முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டம்!

துருக்கி ஏர்லைன்ஸ், பத்து வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கும் இஸ்தான்புல்லுக்கும் இடையில் நேரடி விமான சேவையை இன்று ஆரம்பித்துள்ளதாக ஏர்போர்ட் மற்றும் ஏவியேஷன் சேர்வீசஸ் (இலங்கை) பிரைவேட் லிமிடெட் (ஏஏஎஸ்எல்) தெரிவித்துள்ளது.

அதன்படி இரு நாடுகளுக்கும் இடையே வாரத்திற்கு நான்கு விமானங்கள் இயக்கப்படும்.

தொடக்க நேரடி விமானம் (TK 730) 261 பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அதிகாலை 5.41 மணிக்கு தரையிறங்கியது.

இந்த சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில், முதல் நேரடி விமானம் ஏவியேஷன் சேர்வீசஸ்சால் வரவேற்கப்பட்டது.

குறித்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு இலங்கை தேயிலை வாரியத்தின் அனுசரணையுடன் உலகின் தலைசிறந்த தேயிலைக்கு இணையான சிலோன் தேநீர் பரிசுப் பொதிகள் (Ceylon Tea) வழங்கப்பட்டன.

தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு நிகழ்வையும் ஏவியேஷன் சேர்வீசஸ் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, ஏவியேஷன் சேர்வீசஸ்சின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, இந்த நேரடி விமான செயற்பாடுகளின் ஆரம்பமானது எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறையை பாரியளவில் மேம்படுத்தும் என்றும், துருக்கிய விமான சேவைகளுடன் ஐரோப்பிய இடங்களை இணைக்க இந்த இணைப்பு முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply