சர்வதேச மற்றும் பிராந்திய பலதரப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கை அரச அதிகாரிகளுடன் வட்டமேசை கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.
உலக வங்கி , ஆசிய வளர்ச்சி வங்கி , சர்வதேச நாணய நிதியம் , ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி , பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகாமை, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச வளர்ச்சிக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற முந்தைய வட்டமேசை விவாதத்தின் தொடர்ச்சியாகவே குறித்த வட்டமேசை விவாதம் இடம்பெறுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்றைய கலந்துரையாடலின் கவனம் நெருக்கடியிலிருந்து மீட்சி, நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்வதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டங்கள், இலங்கையின் அபிவிருத்திக்கான சவால்கள், வாய்ப்புகள் மற்றும் கடப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.