இன்று நாடாளுமன்ற அமர்வில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டைப் பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும் நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாகத் தெரிவித்த ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து இலங்கையின் 78 ஆவது வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திய ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்கு புதிய பொறிமுறை ஒன்றை அறிமுகம் செய்யவும், புதிய திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யவும் அரச குழு ஒன்று நிறுவப்படும் என தெரிவித்தார்.
அந்தக் கட்டமைப்புக்கு வெளியே எந்தத் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது எனவும், அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக எதிர்பார்க்கும் நோக்கங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய 2024 முதல் ஒவ்வொரு அமைச்சிலும் விசேட பிரிவொன்று நிறுவப்படும் என்றும் அறிவித்தார்.
இம்முறை கொண்டுவரப்படும் வரவு செலவுத் திட்டம், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் மற்றும் தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே தனக்கு முக்கியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையில் குறிப்பிட்டார். (04)
