பொலிஸார் எனக் கூறியோரின் கைவரிசை
கொழும்பு எல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள மதுபானச் சாலையொன்றில் இருந்து பத்து லட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துச் சென்றபோது, பொலிஸார் போல் வேடமணிந்த இருவர் குறித்த பணத்தில் இரண்டு இலட்சம் ரூபாவைக் களவாடியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுபானக் கடையின் ஊழியர் குறித்த பணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதாகவும், மோட்டார் சைக்கிளை நிறுத்திய இருவர் தாம் பொலிஸார் எனக் கூறி பொலிஸ் அடையாள அட்டையை காட்டியதாகவும் தெரியவருகின்றது . ஊழியரைச் சோதனை செய்வதாக்க கூறி அவரிடம் இருந்த பணத்தை தருமாறு கூறிய அந்த நபர்கள் பணப்பையை சோதித்து விட்டு அதனை திருப்பிக் கொடுத்துள்ளனர்.
ஆனால், பணத்தை வங்கியில் வைப்பிலிடும்போது இரண்டரை லட்சம் ரூபாய் பணம் குறைவாக இருந்தமை தெரியவந்ததையடுத்து, உடனடியாக நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இது குறித்து பொலிசார் ஆராய்ந்தபோது, குறித்த மதுபானக் கடை ஊழியரிடம் பணப்பையை பெற்றுக் கொண்டவர்கள் அவருக்குத் தெரியாமல் அதிலிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தைக் களவாடியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், இந்த இரண்டு நபர்களும் உண்மையில் பொலிஸாரா அல்லது பொலிஸ் வேடம் தரித்த மோசடிப் பேர்வழிகளா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். (ரெந-30)
