உரிய ஆவணங்களின்றி தங்கள் நாட்டில் தங்கியிருந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் அவா்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் ஆப்கன் நாட்டவா்கள் அனைவரும் வெளியேற்றப்படும் வரை இதற்கான நடவடிக்கை தொடரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வெளியேற்றம் தொடர்பாக ஆப்கன் அரசின் செய்தித் தொடா்பாளா் ஜபீஹுல்லா முஜாஹித் கூறும்போது, தங்கள் நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டவா்களை பாகிஸ்தான் அரசு வெளியேற்றி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
1979-89 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தபோது அங்கிருந்து ஏராளமான அகதிகள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனா். அதன் பிறகு நடைபெற்ற போா்களின்போதும் ஆப்கன் அகதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து வந்தது.
எனினும், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டு அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள அனைத்து அகதிகளும் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிட்டது.
அதையடுத்து, உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தானில் தங்கியுள்ள சுமாா் 17 லட்சம் ஆப்கானியா்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. (04)