காஸா நிலவரம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக உள்நுழைந்து தீவிரமான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது.
காஸா நகரத்தில் உள்ள மருத்துவமனைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் பாதிப்புக்குள்ளாகியுள்ள காஸா நிலவரம் குறித்து சீனா, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் அதிபர்களும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இதன்போது, சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரானும் இஸ்ரேல் – பாலஸ்தீன போர் குறித்த தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக மனிதாபிமானத்துக்கு எதிரான செயல்களை தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் பேசியுள்ளனர்.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
காஸா நிலவரம் குறித்து பீஜிங்கில் சீனா, பிரான்ஸ், இந்தோனேசியா, எகிப்து, சௌதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் இணைந்து ஆலோசிக்கவுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக சீனா, பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள் உரையாடியுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. (04)