ஊழல் எதிர்ப்புப் படையணி ஜனாதிபதியிடம் கோரிக்கை
நாட்டை வங்குரோத்து நிலைக்கு ஆளாக்கியதாக உச்ச நீதிமன்றத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நபர்களைத் தண்டிக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஊழல் எதிர்ப்புப் படையணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நாட்டை வங்குரோத்து செய்த இவர்களுக்கு வழங்கப்படும் சகல சலுகைகளையும் இடைநிறுத்துமாறும் ஊழல் எதிர்ப்பு படை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளான கோத்தபாய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ.டி. லக்ஷ்மன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர, முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் உட்பட அப்போதைய நிதிச் சபையும் இதற்கு பொறுப்புக் கூறுவதுடன், அவர்களை தண்டிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இவர்களுக்கு ஓய்வூதியம், உத்தியோகபூர்வ வாசஸ் தலங்கள், உத்தியோகபூர்வ வாகனம், பாதுகாப்பு உள்ளிட்ட கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து இரண்டு நிதி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் இரண்டு மத்திய வங்கி ஆளுநர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறும் லஞ்ச ஊழல் ஒழிப்புப் படையணியின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் செயலாளர் நிரோஷன் பாதுக்க ஆகியோர் ஜனாதிபதியிடம் தமது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். (ரெந-34)
