பங்களாதேஷில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் போட்டியிடவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்காக கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன். சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்து முன்னணி வீரராக உள்ளார்.
இவர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் அவமி லீக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.
பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை ஷகிப் அல் ஹசன் பெற்றுள்ளதாக அவமி லீக் கட்சியின் இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஷகிப் அல் ஹசனின் விண்ணப்பத்தை அவமி லீக் கட்சியின் நாடாளுமன்றக் குழு பரிசீலனை செய்த பிறகு போட்டியிடுவது உறுதி செய்யப்படும்.
ஷகிப் அல் ஹசனின் சொந்த ஊரான மகுரா, பங்களாதேஷ் தலைநகரான டாக்கா உள்ளிட்ட 3 தொகுதிகளில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக அவமி லீக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. (04)