மாணவர்களை பொலித்தீன் லஞ்ச் சீட் சாப்பிட வற்புறுத்திய கல்லூரி அதிபர் இடமாற்றம்!

மதிய உணவைப் போர்த்தியிருந்த பொலித்தீன் லஞ்ச் சீட்களை உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்தியதாகக் கூறப்படும் ரம்புக்பிட்டிய மத்திய கல்லூரியின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டிய மத்திய கல்லூரி மாணவர்கள், மதிய உணவைப் பொதிந்து பள்ளிக்கு கொண்டு வந்த பொலித்தீன் லஞ்ச் சீட்டுகள் மற்றும் செய்தித்தாள்களை விழுங்குமாறு கட்டாயப்படுத்திய சம்பவம் ஒன்று நேற்றையதினம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரிடம் நேற்றைய தினத்திலேயே தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த பாடசாலையின் தரம் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் குழுவொன்றே தமது மதிய உணவை பொலித்தீன் லஞ்ச் சீட்களில் சுற்றப்பட்ட நிலையில் பாடசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இப்பாடசாலை பொலித்தீன் அற்ற வலயமாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த மாணவர்களை குறித்த லஞ்ச் சீட்கள் மற்றும் செய்தித்தாள்களை உண்ணுமாறு பாடசாலையின் அதிபர் வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த தண்டனைக்கு உள்ளான இரண்டு மாணவர்கள் நேற்று காலை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சுகயீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சம்பவத்திற்கு முகம் கொடுத்த ஏனைய ஐந்து மாணவர்களும் இன்று பாடசாலைக்கு வந்துள்ளதாகவும், இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கும் நேற்று முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, பஸ்பாகே பிரதேச கல்விப் பணிப்பாளரினால் ஸ்தல விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் வசதிக்காக குறித்த அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply