வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் இளைஞரின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், யாழ்ப்பாண நீதவான், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதோடு, உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சித்தங்கேணிப் பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 26 வயதுடைய இளைஞர் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை உயிரிழந்தார்.
குறித்த இளைஞரின் உயிரிழப்பு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற அதிகார எல்லைக்குள் இடம்பெற்றமையால், இளைஞனின் உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன.
இளைஞரின் சடலம் தொடர்பான உடற்கூற்றுப் பரிசோதனைகள் கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
அதன்போது, நீதவான் வைத்தியசாலைக்கு நேரில் சென்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைச்சாலை அத்தியட்சகர், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களிடமும் வாக்குமூலங்களை அவர் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, உயிரிழந்த இளைஞருடன் கைதான மற்றைய இளைஞர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் கடந்த 21 ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (04)
