தங்களது எதிா்ப்பையும் மீறி உளவுச் செயற்கைக்கோளை வட கொரியா விண்ணில் செலுத்தியதைக் கண்டித்து, அந்த நாட்டுடன் மேற்கொண்டிருந்த சமாதான ஒப்பந்தத்தின் சில அம்சங்களிலிருந்து தென் கொரியா விலகியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்புக் கொள்கைத் துறை அமைச்சக இணையமைச்சா் ஹியோ டயே-கியூன் அறவித்துள்ளார்.
“உளவுச் செயற்கைக்கேளை விண்ணில் நிலைநிறுத்தியுள்ளதன் மூலம் வட கொரியா பிராந்தியப் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தென் கொரியப் பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் கண்டித்து, பிராந்தியப் பதற்றத்தைக் குறைப்பதற்காக வட கொரியாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் சில அம்சங்களிலிருந்து விலகுகிறோம்”, என அவர் தெரிவித்துள்ளார்.
சா்வதேச நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியா, தனது உளவுச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த ஏற்கெனவே இரு முறை முயற்சிகள் மேற்கொண்டு தோல்வியடைந்தது. இந்த நிலையில், மூன்றாவதாக புதன்கிழமை மேற்கொண்ட இதற்கான முயற்சி வெற்றியடைந்ததாக வட கொரியா அறிவித்தது.
இதனை அமெரிக்காவும் ஜப்பானும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எனினும், இது தொடா்பாக அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் வட கொரியாவுக்கு உடனடியாகக் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், வட கொரியாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியிலிருந்து விலகுவதாக தென் கொரியா தற்போது அறிவித்துள்ளமை உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. (04)